சபரிமலை: கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த நவம்பர் 16ம் தேதியன்று மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாள் முதலே தினந்தோறும் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரையிலான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
பெரும் வெள்ளம், இளம் பெண்கள் வருகை, கோவிட் தொற்று உள்ளிட்ட காரணங்களால் பக்தர்களின் வருகை மிக குறைந்த அளவே காணப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சபரிமலையில் கடந்த 4 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நாளை 1லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நடைதிறக்கப்பட்ட 24 நாட்களில் 125 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் சபரிமலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சபரிமலையில் நேற்று வரை 16 லட்சத்து 5ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், நடை திறந்து 24 நாட்களில் 125 கோடி ரூபாய் வருமானம் மற்றும் காணிக்கையாக கிடைத்துள்ளதாகவும் கூறினார். வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.