சமந்தா: நடிகை சமந்தா மயோசிடிஸ் என்னும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் கடந்த 4 மாதங்களாக படப்பிடிப்புக்கு செல்லவில்லை. இந்தியில் அவர் ஆயுஷ்மான் குரானா ஜோடியாக நடிக்கவிருந்த படத்திலிருந்து விலகி விட்டார். தெலுங்கில் அவர் நடித்துக் கொண்டிருந்த குஷி படம் அவருக்காக தள்ளிப் போடப்பட்டு வருகிறது. அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றும் பலன் இல்லாததால் கேரளாவில் அவர் ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டார். இப்போது மீண்டும் அவர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘மாஸ்கோவின் காவேரி’ படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்தவரும், பாடகி சின்மயின் கணவருமான ராகுல் ரவீந்திரன் சமந்தாவுக்காக ஒரு பதிவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நீ போராடிக் கொண்டே இருப்பாய். இன்னும் இன்னும் போராடிக் கொண்டே இருப்பாய். ஏனென்றால் நீ ஒரு இரும்புப்பெண். உன்னை எதுவும் தோற்கடிக்காது. கஷ்டப்படுத்தாது. மாறாக அவை உன்னை இன்னும் சக்தி வாய்ந்தவளாக மாற்றும்’ என குறிப்பிட்டிருந்தார்.
அவருக்கு பதிலளித்த சமந்தா, ‘நன்றி ராகுல். யார்யார் தங்கள் வாழ்க்கையில் போராடுகிறார்களோ அவர்களுக்கு இதனை நான் சொல்லிக் கொள்கிறேன். போராடிக் கொண்டே இருங்கள். நீங்கள் இன்னும் பலமாக தயாராகுவீர்கள். இன்னும் திடமாக மாறி கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள். போராடுவதால்தான் எனக்கு பலம் கிடைக்கிறது’ என தெரிவித்திருக்கிறார்.