சமந்தா: நடிகை சமந்தா நடித்துள்ள ‘யசோதா’ என்ற பான் இந்தியா திரைப்படம் வருகின்ற 11ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம் வாடகைத்தாய் மோசடி தொடர்பான ஆக்ஷ்ன் திரில்லர் கதையுடன் உருவாகியுள்ளது. ஹரி, ஹரீஷ் இயக்கியுள்ள இப்படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ளார். இப்படத்தில் சமந்தா வாடகைத்தாயாக ஒரு கணமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வாடகைத்தாய் மூலம் நடக்கும் பணமோசடிகளை தட்டிக் கேட்கும் பெண்ணாக நடித்துள்ளார்.
இப்படத்தில் பல சண்டைக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் சமந்தா டூப் போடாமல் நடித்துள்ளார். அவருக்கு ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பென் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். ஏற்கனவே இவர் ‘தி பேமிலி மேன்2’ என்ற இந்தி வெப்சீரிஸில் சமந்தா நடித்துள்ள சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளார். இது தவிர ‘டிரான்ஸ்போர்ட்டர் 3’ ‘இன்ஷெப்ஷன்’, ‘டன்கிர்க்’ உள்பட பல ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
சமந்தாவுடன் பணியாற்றியது குறித்து யானிக் பென் கூறுகையில், ‘சமந்தா ஒரு அர்ப்பணிப்பு மிகுந்த நடிகை. அவரைப் போன்றவர்களை இயக்குவது மிகவும் எளிது. ஆபத்தான காட்சிகளில் டூப் போடாமல் அவரே பங்கேற்று நடித்தார். அவரது துணிச்சலையும், வீரத்தையும் நேரில் பார்த்து வியந்தேன்’ என்றார்.