சர்தார்: கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் லைலா, ராசி கண்ணா, சங்கி பாண்டே, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். தீபாவளி கொண்டாட்டமாக வெளியான இப்படம் வசூலில் 100 கோடியை நெருங்கி வருகிறது. தண்ணீரை வைத்து நடக்கும் முறைகேடு மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளை மையமாக வைத்து ஸ்பை ஆக்ஷ்ன் த்ரில்லராக உருவாகியுள்ள படம்தான் ‘சர்தார்’. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் கார்த்தி வயதான வேடம் மற்றும் போலீஸ் என இருவேறு கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழ்நாட்டில் வெளியிட்டு இருந்தது. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கிறார். இப்படம் வெளியான 12 நாட்களிலேயே சுமார் 85 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. தற்போதும் திரையரங்குகளில் இப்படத்திற்கு வரவேற்பு உள்ளதால் விரைவில் இப்படம் வசூலில் 100 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மன் லான்சன் இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். புதிய காரின் சாவியை நடிகர் கார்த்தி, இயக்குனர் பி.எஸ்.மித்ரனிடம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.