பெண்களின் மாதவிடாய் பொருட்களை இலவசமாக வழங்கும் சட்டம் அமல் படுத்தப்படும் என ஸ்காட்லாந்து அரசு அறிவிப்பு உலகிலேயே முதல் முதலாக இத்திட்டத்தை செயல்படுத்தும் நாடாக ஸ்காட்லாந்து நாடு இருக்கிறது.
ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள பொது இடங்களிலும் மற்றும் பெண் கழிவரைகளிலும் பள்ளி, கல்லூரிகளிலும் பெண்கள் மாதவிடாய் பொருட்களை இலவசமாக எடுத்து பயன் பெறும் சட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. அனைவருக்கும் அனைத்து இடங்களிலும் இலவசமாக கிடைப்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது ஸ்காட்லாந்து அரசு.
மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக்கூடிய சானிடரி நாப்கின் போன்ற பொருள்களை வாங்க முடியாத நிலை, அவற்றால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் உள்ளிட்டவை மாதவிடாய் கால வறுமை (Period poverty) என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதனைப் போக்கும் வகையில் ஸ்காட்லாந்து இந்த சட்டத்தை இயற்றியுள்ளது.

அந்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மோனிகா லெனான், 2019-ம் ஆண்டு நாடு முழுவதும் மாதவிடாய் பொருள்களை இலவசமாக வழங்க வேண்டும் என்பது தொடர்பாக மசோதா ஒன்றைத் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற ஆய்வுக்குழு இதுதொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
இறுதியாக 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 121 பேர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒருவர் கூட இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2021-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி மசோதா சட்டமாக்கப்பட்டது. அந்தச் சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.