சமந்தா: கடந்த 2016ல் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான படம் ‘பிச்சைக்காரன்’. தற்போது ‘பிச்சைக்காரன் 2’ படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது ஏற்பட்ட திடீர் விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனிக்கு முகம் மற்றும் தாடைப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டு மலேசியா மருத்துவமனையிலும் பிறகு சென்னை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றார். தற்போது உடல்நிலை தேறி வரும் அவர் வீட்டில் கட்டாய ஓய்வு எடுத்து வரும் நிலையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் இப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறி வரும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சரித்திர படமான ‘சாகுந்தலம்’ என்ற பன்மொழி படமும் ஏப்ரல் 14 அன்றுதான் திரைக்கு வருகிறது. ஏற்கனவே இப்படம் வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 14 அன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘ருத்ரன்’ படமும் ஏப்ரல் 14 அன்று திரைக்கு வருகிறது. பல்வேறு எதிர்பார்ப்புடன் இருக்கும் மூன்று படங்களும் ஒரே நாளில் திரைக்கு வருவது ரசிகர்களிடம் மேலும் ஆவலை அதிகரித்துள்ளது.