ஷாருக்கான்: பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் சமீபத்தில் ‘பதான்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்தார். இப்படம் வெளியாவதற்கு முன்பு இருந்தே பல சர்ச்சைகளை கடந்த பின்னரே திரைக்கு வந்தது. ஆனால் இப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்து வருகிறது. சுமார் 1000 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது. இதனால் ஷாருக்கானை கிண்டல் செய்த அனைவரும் கப்சிப் என்றாகிவிட்டனர். தற்போது அட்லீ இயக்கத்தில் ‘ஜவான்’ படத்தில் நடித்து வரும் ஷாருக்கான் தனது சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அப்போது ஒரு ரசிகர், ‘சினிமாவில் இருந்து நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு பாலிவுட்டில் உங்களுக்கு அடுத்து முன்னணி நடிகர் யாராக இருப்பார்?’ என்று கேட்டார். இதற்கு அதிரடியாக பதிலளித்த ஷாருக்கான் ‘எந்த நிலையிலும் நடிப்பில் இருந்து ஓய்வு பெற மாட்டேன். ஒரு வேளை என்னை யாராவது வீழ்த்த நினைத்தால் இப்போது இருப்பதை விடவும் அதிரடியாக விஸ்வரூபம் எடுப்பேன்’ என்று பதிவிட்டுள்ளார். இதே கருத்தை ‘பதான்’ கிளைமாக்சில் சல்மான்கானிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.