பதான்: கடந்த டிசம்பர் மாதம் இந்தியில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த ‘பதான்’ படத்தின் டிரைலர் வெளியானது. அதில் ஒரு பாடல் காட்சியில், காவி நிற பிகினி உடையில் தீபிகா படுகோன் தோன்றி நடனமாடிய காட்சிகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட சமூகத்தை சுட்டிக்காட்டும் வகையில் தீபிகா படுகோன் ஆபாசமாக நடித்ததாக குற்றம் சாட்டினர்.
இது குறித்து மத்திய பிரதேச சபாநாயகர் கிரிஷ் கவுதம் கூறுகையில், ‘ஷாருக்கான் தனது மகளுடன் ‘பதான்’ படத்தை பார்க்க வேண்டும். அதோடு அப்படத்தை தனது மகளுடன் பார்த்ததை வெளியில் சொல்ல வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து மும்பை திரும்பிய ஷாருக்கான் நேற்று முன்தினம் யாஷ்ராஜ் பிலிம்ஸ் அலுவலகத்தில் தனது மகள் சுஹானா கான், மனைவி கவுரி கான், மகன் ஆர்யன் கான் ஆகியோருடன் ‘பதான்’ படத்தை பார்த்தார். மத்திய பிரதேச சபாநாயகரின் சவாலை ஏற்று தனது குடும்பத்தினருடன் ‘பதான்’ படத்தை ஷாருக்கான் பார்த்தது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.