தேனிசைத் தென்றல்: தமிழகத்தில் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவரான தேனிசைத் தென்றல் ‘தேவா’வின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அவரது தலைமையில் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இசை கச்சேரி நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத், ஸ்ரீகாந்த் தேவா மற்றும் நடிகைகள் மீனா, மாளவிகா மற்றும் நடிகர் ஜெய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கச்சேரியின் வீடியோக்கள் பலவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அதில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோதான் தற்போது பட்டிதொட்டி எங்கும் வைரலாகி வருகிறது.
அது என்னவெனில் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட சிங்கப்பூரின் ஆறாவது அதிபராக இருந்த ‘எஸ்.ஆர்.நாதன்’ தனது இறுதி சடங்கின் போது இசையமைப்பாளர் தேவா இசையமைத்து பொற்காலம் படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலை ஒலிக்க செய்யும்படி கூறியிருந்தார். அதன்படியே நாதனின் இறுதிசடங்கின் போது தேவாவின் பாடல் ஒலிக்கப்பட்டது. இந்நிகழ்வு சிங்கப்பூர் மட்டுமில்லாமல் தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளிலும் பரவி அங்கும் மொழிபெயர்த்து ஒலிக்க செய்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்வை தேவாவின் இசை கச்சேரி மேடையில் பகிர்ந்த ரஜினி அவர்கள், மற்ற நாடுகளில் உள்ளவர்களால் வெகுவாக பாராட்டப்பட்ட தேவாவின் படைப்பு குறித்து தமிழகத்தில் எந்த ஊடகத்திலும் செய்தியாக கூட வெளியாகவில்லை என்று அதிருப்தியோடு கூறியதோடு, இதுபோன்ற நிகழ்வுகளை கட்டாயம் ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். தற்போது ரஜினிகாந்த் கூறிய அந்த இறுதிசடங்கு வீடியோ அனைவராலும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.