கவுண்டமணி: நகைச்சுவை நடிகர் கவுண்டமணி 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். 1980, 90களில் தனது காமெடி நடிப்பால் கலக்கியவர் கவுண்டமணி. அந்நாளில் கவுண்டமணி-செந்தில் காமெடி என்றால் அறியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இவர்களது நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டது. வயதானதால் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார் கவுண்டமணி. இந்நிலையில் 6 வருடங்களுக்கு முன் சில இயக்குனர்கள் வற்புறுத்தி கேட்டதால் ‘எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற படத்தில் ஹீரோவாக கவுண்டமணி நடித்தார். அதை தொடர்ந்து 49ஓ என்ற படத்திலும் நடித்தார். அதன் பிறகு வந்த வாய்ப்புகளை அவர் ஏற்க மறுத்து வந்தார். இந்நிலையில் அவரது தீவிர ரசிகரான நடிகர் சிவகார்த்திகேயன் அவரை மீண்டும் நடிக்க வைக்க முயற்சி செய்தார். அதற்கு இப்போது பலன் கிடைத்துள்ளது.
பேயை காணோம் என்ற படத்தை இயக்கியவர் செல்வ அன்பரசன். அவர் சொன்ன கதை பிடித்துவிட்டதால் இதில் நடிக்க கவுண்டமணி சம்மதம் தெரிவித்துள்ளார். 83 வயதாகும் கவுண்டமணி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். கதைப்படி ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியராக அவர் நடிக்க உள்ளார். படத்துக்கு ‘பழனிசாமி வாத்தியார்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். கவுண்டமணி கேட்டுக்கொண்டதால்தான் அவர் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்க உள்ளது.