சிவகார்த்திகேயன்: இன்ஜினியரிங் படித்து விட்டு பிறகு டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், மிமிக்ரி கலைஞராகவும் செயல்பட்டு வந்தவர் சிவகார்த்திகேயன். இதையடுத்து நெல்சன் திலீ்ப்குமார் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘வேட்டை மன்னன்’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. பிறகு டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் இயக்கத்தில் அஜித் குமார், நயன் தாரா நடித்த ‘ஏகன்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.
பிறகு கடந்த 2012 பிப்ரவரி 3ம் தேதி பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘மெரினா’ படத்தில் ஓவியா ஜோடியாக நடித்து ஹீரோவாக அறிமுகமானார். பிறகு தமிழிலும், தெலுங்கிலும் 23 படங்களில் நடித்து முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறினார். பின்னணி பாடகராகவும், பாடலாசிரியராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ள அவர் மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் ஒன்றில் நடிகர் சித்தார்த்துக்கு டப்பிங் பேசினார்.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷ்ன் சார்பில் ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழி’, ‘டாக்டர்’, ‘டான்’ ஆகிய படங்களை தயாரித்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’, மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கடந்த 3ம் தேதியுடன் அவர் சினிமாவுக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ‘மாவீரன்’ படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.