பிரின்ஸ்: சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் தமிழ் நடிகர்களில் ஒருவர் ஆவார். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் தன் சொந்த முயற்சியினால் தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமாகி பின்பு படிப்படியாக முன்னேறி படத்தில் துணை நடிகராக நடித்து பின் கதையின் நாயகனாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக முன்னேறியுள்ளார். அவர் தேர்வு செய்து நடிக்கும் ஒவ்வொரு படங்களும் அவரது முன்னேற்றத்திற்கு படிக்கட்டுக்களாக அமைந்தன.
சமீபத்தில் அவர் நடித்த ‘டாக்டர்’ படம் சிவகார்த்திகேயனை வேறு ஒரு கோணத்தில் காண்பித்தது. அதற்காக அவர் சிறந்த நடிகருக்கான சைமா விருதினையும் பெற்றிருக்கிறார். டாக்டர் பட வெற்றியை தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் லைகாவுடன் இணைந்து தயாரித்து நடித்த படம் ‘டான்’. இப்படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்தது.
இதை தொடர்ந்து தெலுங்கில் ‘பிட்டாகோடா’, ‘ஜதிரத்னலு’ படங்களை இயக்கிய அனுதீப்புடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோசப்கா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சத்தியராஜ், பிரேம்ஜி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் சத்தியராஜ் மீண்டும் இணைந்துள்ளார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி ஆசிரயராக நடிப்பதாக கூறும் நிலையில் அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டரில் உலக உருண்டையுடன் அவர் அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது. ஏற்கனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமீபத்தில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இப்படம் தீபாவளியன்றி அக்டோபர் 24ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்டோபர் 21ம் தேதியன்றே திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு இரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.