சிவா-சூரி: நடிகர் சிவகார்த்திகேயன், சூரி இருவரும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் முதலே இணைந்து நடித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் படங்களில் பெரும்பாலும் சூரிதான் காமெடியனாக வருவார். இவ்விருவரின் காமெடியும் ஒவ்வொரு படத்திலும் பட்டையை கிளப்புவதாக இருக்கும். மேலும் இருவரும் இதுவரை நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். தற்போது சூரி வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அடுத்ததாக சூரி ஓடிடிக்காக உருவாகும் படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் சூரி ஜோடியாக மலையாள நடிகை அன்னபென் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் வெளியான ‘ஹெலன்’, ‘காப்பா’ உள்பட ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனும், சூரியும் நல்ல நண்பர்களாக உள்ள நிலையில் சூரியை வைத்து படம் தயாரிக்க சிவகார்த்திகேயன் முன்பே திட்டமிட்டிருந்தார். அதன்படி இந்த ஓடிடி படம் சூரி நடிப்பில் எஸ்கே தயாரிப்பில் உருவாக உள்ளது.