ஸ்ரீரஙகம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக 800 பேர் அமரும் வகையில் ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ பெஞ்சுகளுடன் காத்திருப்பு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தற்போதுகு வைகுண்ட ஏகாதேசி துவங்க உள்ளதாலும், ஐயப்ப பக்தர்கள் வருகையாலும் கோயிலுக்கு தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இலவச தரிசன வரிசையில் செல்லும் பக்தர்கள் சில மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
இதனால் பக்தர்கள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் கோயில் கொடி மரத்தில் இருந்து துரை பிரகாரம் செல்லும் வழியில் கிழக்கு பகுதியில் இருந்து பிரம்மாண்டமான காத்திருப்பு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடத்தில் 800 பக்தர்கள் அமரும் வகையில் இருக்கைகளும், குடிநீர் வசதியும், மின்விசிறி வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் இலவச மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசன வரிசைகளில் பக்தர்கள் அமர்ந்து செல்ல வசதியாக 42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 350 ஸ்டீல் பெஞ்சுகளும் புதிதாக போடப்பட்டுள்ளன.