ஸ்ருதி ஹாசன்: கமல்ஹாசனின் முதல் மகளான ஸ்ருதி ஹாசன் தமிழில் சூர்யாவின் ‘7ம் அறிவு’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். வெளிநாட்டில் இசை கற்றுக்கொண்ட அவர் பின்னணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் ஸ்ருதிஹாசன் நடித்த சில படங்கள் வெற்றி பெறாத நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஸ்ருதி ஹாசன் நடித்த ‘வால்டேர் வீரய்யா’, பாலகிருஷ்ணாவுடன் நடித்த ‘வீரசிம்ஹா ரெட்டி’ ஆகிய படங்கள் திரைக்கு வந்து வெற்றி பெற்றுள்ளன. இதனால் தெலுங்கு படவுலகில் ஸ்ருதிஹாசனின் மார்க்கெட் நிலவரம் ஏறுமுகத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில் ‘கேஜிஎஃப்’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் பிரசாந்த் நீல், ஒளிப்பதிவாளர் புவன் ஆகியோருடன் அவர் எடுத்துக்கொண்ட போட்டோவையும் வெளியிட்டுள்ளார். பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் பான் இந்தியா படமான ‘சலார்’ வரும் செப்டம்பர் 28ம் தேதி திரைக்கு வருகிறது. தவிர ‘திஐ’ என்ற ஆங்கிலப் படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். தமிழில் மட்டும் அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.