துணிவு: அஜித் குமார் நடித்து வரும் 2023 பொங்கல் அன்று வெளிவர இருக்கும் திரைப்படம் ‘துணிவு’. இப்படத்தின் இயக்குனர் ஹெச். வினோத். ஹிந்தி இயக்குனர் போனி கபூர், ஹெச். வினோத் மற்றும் அஜித் குமார் கூட்டணியில் ‘நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. இப்படங்களை தொடர்ந்து இம்மூவரின் கூட்டணியில் மீண்டும் திரைக்கு வர இருக்கும் படம் ‘துணிவு’. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் நடக்கிறது. இப்படத்தின் கதாநாயகியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார்.
இந்தப்படம் ‘மணி ஹெய்ஸ்ட்’ போன்ற திரில்லர் படம் என்று ஏற்கனவே இயக்குனர் அறிவித்துள்ளதால் வங்கி கொள்ளையை மையப்படுத்தி துணிவு படம் உருவாகிறது என்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் ரூபாய் நோட்டு பாணியில் டிசைன் செய்யப்பட்டு உள்ளதால் இப்படம் வங்கி கொள்ளை சம்பந்தமானதுதான் என்று இரசிகர்கள் தீர்மானித்துள்ளனர்.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் மூலம் இரசிகர்களிடம் பிரபலமான இயக்குனர் ஹெச். வினோத் துணிவு பட கதையை பற்றி இதுவரை எதுவும் பேசவில்லை. கடந்த 1987ல் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் போலீஸ் அதிகாரிகளை போல் உடையணிந்து வந்த சிலர், ஒரு வங்கியில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 4.5 மில்லியன் டாலர்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘துணிவு’ படம் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கொள்ளையடித்தவர்கள் பாங்காக்கிற்கு தப்பித்து செல்வதாகவும் அஜித் குமார் அவர்களை விரட்டிச் சென்று கைது செய்வதாகவும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் அஜித் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாக தெரிகிறது. ஹீரோ அஜித் குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துணிவு படத்தின் போஸ்டர்கள் மற்றும் கதைக்களம் ஆகியவை இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.