வெளிநாடு லீக் தொடர்களில் கவனம் செலுத்தப் போவதாகவும் அதனால் இந்தியாவில் அனைத்துவித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் சுரேஷ் ரெய்னா.
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர் சுரோஷ் ரெய்னா. அவர் கடந்த வருடங்களில் டெஸ்ட் மற்றும் ஓருநாள் தொடரில் இருந்து விலகினார். அதன்பின் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல நேரங்களில் வெற்றிக்கு வழிவகை செய்துள்ளார். இவரை சென்னை அணி ரசிகர்கள் சின்ன தல என்று அன்பாக கூறுவது உண்டு.
பல ஆண்டுகளாக ரெய்னா சிஎஸ்கே அணிக்கு மேட்ச் வின்னராக இருந்தவர். அவர் 205 ஐபிஎல் போட்டிகளில் 32.5 சராசரி மற்றும் 136.7 ஸ்ட்ரைக் ரேட்டில் 5528 ரன்கள் குவித்துள்ளார்.
2020-ம் ஆண்டு டோனியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரெய்னாவும் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் உள்நாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த ரெய்னா தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இதுவரை தனக்கு ஆதரவு அளித்த பிசிசிஐ, உத்திரபிரதேச கிரிக்கெட் சங்கம், ஐபிஎல் நிர்வாகம், ராஜீவ் சுக்லா மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ரெய்னா 18 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார். குறுகிய காலத்திற்கு அணிக்கு கேப்டனாக இருந்த பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது. இந்தியாவுக்காக ரெய்னா 226 ஒருநாள் போட்டிகளில் 5615 ரன்களும், 78 டி20 போட்டிகளில் 1605 ரன்களும் குவித்துள்ளார். டெஸ்டில் அறிமுகத்தில் சதம் அடித்த ரெய்னா, ஆட்டத்தின் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார், மேலும் அவரது சதங்கள் வெளிநாடுகளில் அடிக்கப்பட்டன.
கடந்த ஐபிஎல் போட்டிகளில் அவரை எந்த அணி நிர்வாகமும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வெளிநாடு லீக்களில் தன் கவனத்தை திருப்பியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.