பிதாமகன்: விக்ரம், சூர்யா நடித்து கடந்த 2003ம் ஆண்டு வெளியான பிதாமகன் படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் வெற்றி அடைந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. மீண்டும் ஒரு திரைப்படத்தை தனக்கு இயக்கிக் கொடுக்குமாறு இயக்குனர் பாலாவிற்கு 25லட்சம் ரூபாய் முன் பணம் கொடுத்துள்ளார். சொன்னபடி பாலா படம் இயக்கவில்லை. அப்பணத்தை திருப்பி தரக்கோரி துரை பல முறை கேட்டும் பாலா தரவில்லை.
19 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி இயக்குனர் பாலாவின் அலுவலகத்திற்கு சென்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார் வி.ஏ.துரை. அவரை பாலாவின் ஆட்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இப்போது அவரது வாழ்க்கை சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு பார்த்துக் கொள்ள கூட ஆள் இல்லாமல் சாலிகிராமத்தில் உள்ள அவரது நண்பரின் ஒருவர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். மிகுந்த சிரமத்தில் இருக்கும் அவருக்கு யாராவது உதவினால் நன்றாக இருக்கும் என்று துரையின் நண்பர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும் நிலையில் உள்ளார் துரை. மேலும் அவரை கவனித்துக் கொள்ள கூட ஆளில்லாத பரிதாபமான நிலைமையிலும் அவர் இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்நிலையில் அவருக்கு ரூ.2லட்சம் நிதியுதவியை நடிகர் சூர்யா வழங்கியுள்ளார்.