தமிழக கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சாமி தரிசனம் மேற்கொள்ளவும் மாற்றுத்திறனாளிகள் கோவிலில் திருமணம் நடத்த தீர்மானித்தால் மணமக்கள் இருவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் புதிய ஆடைகள் மற்றும் திருமணத்திற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் பல சலுகைகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
கடந்த சட்டமற்ற கூட்டத்தொடரில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று அறிவித்தார். மேலும் திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் கோவிலுக்கு சென்று எளிமையான முறையிலும் கோவில்களில் கூட்டம் அதிகமாக இருந்தாலும் அவர்களுக்கென்று தனி வரிசையில் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். மேலும், அனைத்து கோவில்களிலும் அவர்கள் சுலபமாக கோவிலை சுற்றி பார்க்கவும் சாமி தரிசனம் செய்யவும் குறைந்தபட்சம் 5 சக்கர நார்காலிகள் கோவில் வாசலில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் மனுதாக்கல் செய்தார். அம்மனுவி்ல் சென்னையில் கட்டப்பட்டுள்ள 32 மெட்ரோ ரயில் நிலையங்களும், புதிதாக கட்டப்பட்டு வரும் நிலையங்களும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் கட்டப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மெட்ரோ நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் மெட்ரோ நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இன்னும் ஆறு வார காலத்தில் ஏற்படுத்தப்படும் எனவும் புதிதாக கட்டப்படும் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கட்டப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஆறு வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.