ஒடிஷா: உலக அளவில் பலம் வாய்ந்த 16 அணிகள் பங்கேற்கும் 15வது உலக கோப்பை (ஆண்கள்) ஹாக்கி போட்டி ஒடிஷா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர் கேலா நகரங்களில் கடந்த 13ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளை காணவும் ஒடிஷா மாநிலத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளை பார்வையிடவும், சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் 18ம் தேதி ஒடிஷா மாநிலம் சென்றார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஹாக்கி இந்தியா பொருளாளர் சேகர் மனோகரன், ஹாக்கி இந்தியா செயல் இயக்குநர் கமாண்டர் ஸ்ரீவத்ஸா மற்றும் நிர்வாகிகள் புவனேஸ்வர் விமான நிலையத்தில் வரவேற்றனர். தொடர்ந்து அமைச்சர் உதயநிதிநேற்று புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கத்தில் கால் பந்து, ஹாக்கி, தடகள மைதானம், நீச்சல் குளம் மற்றும் துப்பாக்கி சுடும் அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து ஒடிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நேற்று சந்தித்த தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவு பரிசு ஒன்றை அவருக்கு வழங்கினார்.