தான்ஸான்யா: பயணிகள் விமானம் ஒன்று நேற்று காலை தான்ஸான்யாவில் உள்ள லேக் விக்டோரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஏரிக்கு அருகில் இருக்கும் புக்கோபா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஏரியில் விழுந்த விமானமானது தான்ஸானியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான ப்ரிசிஷன் ஏர்க்கு சொந்தமானதாகும். விமானத்தில் பயணிகள் 39 பேர், பைலட்டுகள் 2 பேர், 2 கேபின் க்ரூ பணியாளர்கள் என மொத்தம் 43 பேர் பயணித்துள்ளனர். சூறாவளிக் காற்று வீசியதாலும், கனமழை பெய்ததாலும் விமானிகளால் விமானத்தை கட்டுபடுத்த முடியாமல் போயிருக்கலாம் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
விமானத்தின் முழுப்பகுதியும் நீரில் மூழ்கியிருப்பது போன்றும் அதன் வால்பகுதி மட்டும் வெளியில் தெரிவது போன்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. விமான நிலையத்தில் இருந்து வெறும் 100 மீட்டர் தூரத்தில்தான் இந்த விபத்து நடந்திருக்கிறது. விபத்து நடந்த உடனே மீட்பு பணிகளை தொடங்கியுள்ளதாகவும், 26 பேர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் புக்கோபா பகுதியின் ஆணையர் ஆல்பர்ட் சால்மிலா தெரிவித்துள்ளார்.
‘விமான விபத்து செய்தியை கேட்டு வருத்தமுற்றேன். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பொறுமையாக இருப்போம் கடவுள் நமக்கு உதவி செய்வார்’ என தான்ஸானியா அதிபர் ஷாமியா சுலுஹீ ஹாசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.