வெங்கடேஷ்: எப்போதுமே சொந்த சம்பாத்தியத்தில் ஒரு பொருள் வாங்கினால் அதற்காக நம்மை நாமே மெச்சிக்கொள்ளும் தருணங்கள் அதிகம். ஒவ்வொரு தடவையும் ‘இது என் பணத்தில் வாங்கினது. ஒரு ஒரு ரூபாயாக நானே சேமித்து வாங்கினது’ என்று சொல்லிக்கொண்டே இருப்போம். இதை உண்மையாக்கும் வகையில் தெலுங்கானாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு ஒரு ரூபாயாக சேமித்து வைத்து தான் ஆசைப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றை வாங்கியிருக்கிறார்.
வெங்கடேஷ் என்ற அந்த இளைஞர் பாலிடெக் மாணவராம். தெலுங்கானாவின் ராமகிருஷ்ணாபூர் பகுதியில் வசித்து வரும் இவருக்கு சொந்தமாக ஒரு பைக் வாங்க வேண்டும் என்ற கனவு இருந்திருக்கிறது. அதற்காக விசித்திரமாக பணம் சேர்த்து வைத்திருக்கிறார் அவர். அதற்காக அவர் செய்த விசித்திர செயல் தான் ஒரு ரூபாய் நாணயங்களை சேர்க்க தொடங்கியது. அப்படி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சுமார் 112 பைகளில் தனக்கு வேண்டிய அளவு பணத்தை அவர் சேர்த்திருக்கிறரா்.
தேவையான பணம் சேர்ந்ததும் வெங்கடேஷ் ஷோரூம் ஊழியர்களை அணுகி தன் பைக் ஆசையையும், தான் சேமித்த ஒரு ரூபாய் மூட்டைகளையும் பற்றி கூறியிருக்கிறார். முதலில் தயக்கம் காட்டிய ஷோரும் ஊழியர்களை சமாதானம் செய்து ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார் வெங்கடேஷ். பின்னர் ஒருநாள் தான் சேமித்த மொத்த பணத்தையும் நண்பர்களுடன் சேர்ந்து அள்ளிப்போட்டு ஷோரூமுக்கு கொண்டு சென்றுள்ளார். அந்த நாணயங்களை ஷோரூம் ஊழியர்கள் அரை நாள் எண்ணியுள்ளனர். மொத்தம் அதில் ரூ. 2.5 லட்சம் தொகை சேமிப்பில் இருந்திருக்கிறது. அதை வைத்து இறுதியாக தான் ஆசைப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக்கை வாங்கியிருக்கிறார் வெங்கடேஷ்.