விஜய்-அட்லீ: வம்சி பைடிபள்ளி இயக்கிய ‘வாரிசு’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடித்து வருகிறார். ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் புரோமோ வீடியோ கடந்த 3ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷீட்டிங் சென்னை, கொடைக்கானல் ஆகிய இடங்களை தொடர்ந்து தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய 3 வெற்றி படங்களை இயக்கிய அட்லீ ‘தளபதி 68’ படத்தில் இணைய உள்ளதாக பிங்க் வில்லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அட்லீ சொன்ன கதையை விஜய் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஷாருக்கான் நடிப்பில் தற்போது அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் நிறைவடைந்து படம் ஜீன் 2ம் தேதி வெளியாகிறது. இந்த படம் ரிலீசானதும் விஜய்யின் ‘தளபதி 68’ படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் அட்லீ கவனம் செலுத்த உள்ளதாகவும், வருகின்ற செப்டம்பர் அல்லது அக்டோபரில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் பரவியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.