விவேக்: விஜய் நடித்த ‘மெர்சல்’, ‘பிகில்’, ‘வாரிசு’ ஆகிய படங்களுக்கு பாடல் எழுதியவர் பாடலாசிரியர் விவேக். அவர் எழுதிய ‘ஆளப்போறான் தமிழன்’, ‘சிங்கப் பெண்ணே’ போன்ற பாடல்கள் மிகப் பெரிய ஹிட்டானது. மேலும் இப்பாடல்கள் விஜய்க்கு சிக்னேச்சர் பாடல்களாகவும் அமைந்தன. ‘வாரிசு’ படத்துக்கும் பாடல் எழுதிய விவேக் கூடுதலாக திரைக்கதை, வசனத்தில் இயக்குனருக்கு உதவி புரிந்துள்ளார். இது குறித்து ‘வாரிசு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், ‘பாடலாசிரியர் விவேக்கிற்குள் ஒரு இயக்குனர் ஒளிந்திருக்கிறார். விரைவில் அவர் வெளியே வருவார்’ என்று அவர் பேசினார்.
இந்நிலையில் விஜய் தன் கன்னத்தில் முத்தமிட்ட போட்டோவை வெளியிட்டுள்ள விவேக், ‘சில உறவுகளைப் பற்றி விவிரிக்க முடியாது. இந்த நம்ப முடியாத பயணத்தில், நீங்கள் என்னிடம் ஒரு மூத்த சகோதரனைப் போல் அன்பு செலுத்தி ஆதரவு தருகிறீர்கள். எனது கலைப்பயணத்தில் இந்த அழகான தருணத்தை எதனாலும் வெல்ல முடியாது’ என்று நெகிழ்ச்சியுடன் அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.