தேவர் ஜெயந்தி விழா: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி மற்றும் 60 வது குருபூஜை இன்று கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் திமுகவின் மூத்த அமைச்சர்களான நேரு, துரைமுருகன், ராஜகண்ணப்பன், ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் நினைவிடத்தில் முன்பு கலைஞர் அவர்கள் மரியாதை செலுத்தினார். அவருக்கு பின்னர் மாண்பமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மரியாதை செய்தார். அவரது உடல்நிலை காரணமாக அவரால் இன்று வர இயலவில்லை. அதனால் கழகத்தின் மூத்த அமைச்சர்கள் மரியாதை செலுத்தினோம். ‘மண்ணுக்குள் மாணிக்கம்’ என்று அண்ணா சொன்னதை போல பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் தேவர் அவர்கள். அவர் சொன்னதைப் போல இன்று தேவரால் பல மாணிக்கங்கள் அரசியலிலும், வாழ்விலும் ஜொலித்து வருகின்றனர் என்றார்.