திருமலை திருப்பதி: பெருமாளுக்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் மற்றும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு சேவைகள் நடைபெறும். இந்த மாதத்தில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக திருமலை திருப்பதிக்கு வருவார்கள். இந்நிலையில் நேற்று புரட்டாசி மாதம் பிறந்ததை தொடர்ந்து வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் திருப்பதியில் எங்கு பார்த்தாலும் நேற்று பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 82,392 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 41,800 பேர் தலைமுடி காணிக்கையாக செலுத்தினர். உண்டியல் காணிக்கை மட்டும் 4.59 கோடியாகும். நேற்று முன்தினம் பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் இரண்டாவது நாளாக 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வரும் 27ம் தேதி பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதால் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால் சனிக்கிழமை தோறும் பக்தர்களின் கூட்டம் வெகுவாக அதிகரிக்க தொடங்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.