திருமங்கலம். மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உட்பட நாடு முழுவதும் இருந்து 750 மாணவிகள் சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ‘ஆசாதி சாட்-1’ என்ற செயற்கை்கோள் மென்பொருளுக்கான உதிரி பாகமான சிப்களை தயாரித்திருந்தனர். இந்த பாகங்களுடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் அனுப்பப்பட்டது.
ஆனால் ராக்கெட் வழி மாறியதால் வெற்றிகரமாக செயற்கைக்கோளை விண்ணில் ஏவ முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக தற்போது நாடு முழுவதும் இருந்து 75 பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகளை தேர்வு செய்து இஸ்ரோ, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவுடன் இணைந்து மீண்டும் ‘ஆசாதி சாட்-2’ செயற்கைக்கோள் சிப்களை தயாரிக்கும் பணிகளை துவக்கினர்.
இதில் மதுரை திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயோமேத்ஸ் படிக்கும் 10 மாணவிகள் தேர்வாகியுள்ளனர். இவர்கள் 10 பேரும் ஒன்றிணைந்து 50 கிராம் எடையுள்ள மென்பொருள் சிப்களை தயாரித்து வெற்றிகரமாக இஸ்ரோவிற்கு அனுப்பியுள்ளனர். இதே போல் நாடு முழுவதும் இருந்து மாணவிகள் அனுப்பிய சிப்கள் ஆசாதி சாட்-2ல் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் வரும் 10ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட உள்ளது. இதனை நேரில் பார்வையிட திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10 பேர், தலைமையாசிரியர் கர்ணன், அறிவியல் ஆசிரியை சிந்தியா மற்றும் ஆசிரியர் குழுவினருடன் நாளை பிப்ரவரி 9ம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு செல்ல உள்ளனர்.