தீபிகா படுகோன்: பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன். ஷாருக்கான், சல்மான் கான் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார் அவர். தமிழில் டப் செய்யப்பட்ட ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக, சத்யராஜின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். சமீபத்தில் அவர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ‘பதான்’ திரைப்படம் பல சர்ச்சைகளை கடந்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல கோடி ரூபாய் வசூல் சாதனையும் புரிந்து வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் தொகுப்பாளராகவும், விருதுக்கான தேர்வு குழுவிலும் இடம் பெற்றிருக்கிறார் தீபிகா படுகோன். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற 93வது ஆஸ்கர் விருதுகள் விழாவைத்த தொகுத்து வழங்கும் குழுவில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இடம் பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது தீபிகா படுகோனும் ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்கவிருக்கிறார். இவர் கேன்ஸ் விருதுக்கான தேர்வு குழுவிலும் இடம் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் ஆஸ்கர் தொகுப்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து ரசிகர்கள் கடும் மகிழ்ச்சியை வெளியிட்டு வருகின்றனர். ஹாலிவுட் பிரபலங்கள் எமிலி பிளண்ட், சாமுவேல் எல் ஜாக்சன், டுவைன் ஜான்சன், மைக்கேல் பி ஜோர்டன், ஜானெல்லே மோனே, ஜோ சல்டானா, ஜெனிபர் கான்னெல்லி, ரிஸ் அகமது மற்றும் மெலிசா மெக்கார்த்தி ஆகியோருடன் இந்திய நடிகை தீபிகா படுகோனும் இடம் பெற்றுள்ளார்.