விவசாயி தந்தை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள கீழ்ஆவதாம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன். இவருக்கு ப்ரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி என்ற மூன்று மகள்களும் காரத்திகேயன் என்ற ஒரு மகனும் உள்ளனர். 16 வருடங்களுக்கு முன்பே இவர்களின் தாயும் வெங்கடேசனின் மனைவியுமான சசிகலா உடல் நலக் குறைவால் காலமானார். வெங்கடேசன் தனது நான்கு பிள்ளைகளையும் அரசுப் பள்ளியில் படிக்க வைத்தார். தொடர்ந்து அவர்களை கல்லூரியில் சேர்த்து மேற்படிப்பும் படிக்க வைத்துள்ளார். சிறுவயது முதலே காவலராக வேண்டும் என்ற அவரது கனவை தன் பிள்ளைகள் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். அதற்காக தன் பெண் பிள்ளைகளுக்கு தொடர்ந்து அவர் பயிற்சியளித்து வந்துள்ளார்.
அவரது மூத்த மகள் ப்ரீத்திக்கு திருமணம் ஆகிவிட்டது. தொடர் பயிற்சி இருந்து வந்தாலும் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த காவலர் போட்டி தேர்வில் அவரது இளைய மகள்கள் இருவரும் கலந்து கொண்டு தோல்வியை சந்தித்து வந்துள்ளனர். அதனால் நடந்து முடிந்த காவலர் தேர்வில் மூத்த மகள் ப்ரீத்தி உட்பட தனது மூன்று மகள்களையுமே தேர்வுக்கு போட்டியிட தயார்படுத்தியுள்ளார் வெங்கடேசன். அதற்காக தனது விவசாய நிலத்திலேயே அவர்களுக்கு கடும் பயிற்சி அளித்துள்ளார். அவர்களது கடும் உழைப்பினால் இந்த ஆண்டு மூவருமே தேர்வில் வெற்றி பெற்று, அவர்களது காவலர் பயிற்சியையும் நிறைவு செய்து சாதனை புரிந்துள்ளனர். இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகள் காவலர் தேர்வில் வெற்றி பெற்றதைக் கண்டு அக்கிராமமே ஆச்சரியமும், மகிழ்ச்சியையும் அடைந்துள்ளது. வைராக்கியமான அவர்களது விவசாய தந்தை தாயாகவும் இருந்து அவர்களுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார்.