திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறை தினமான நேற்று 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் இலவச தரிசன வரிசை ஆன்லைன் மூலம் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் 78 ஆயிரத்து 158 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 27 ஆயிரத்து 90 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.
கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. இதில் ரூ. 3.73 கோடி காணிக்கையாக கிடைத்தது. நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள 12 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 18 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.