திருப்பரங்குன்றம்: திருக்கார்த்திகை நாளை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை மகா தீபம் மலையில் ஏற்றபடுகிறது. இதயொட்டி திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.
திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சுப்பிரமணியருக்கு ஆண்டு முழவதும் வரும் பங்குனி பெருவிழா, தை மாத தெப்பத் திருவிழா மற்றும் கார்த்திகை தீபத் திருவிழாவில் மட்டும் மூன்று ரத வீதிகளில் பவனி வருவது வழக்கம். கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளினால் தேரோட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது. தற்போது, கார்த்திகை மாத தீபத்திருவிழாவிற்காக இன்று காலை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கார்த்திகை தீப திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுப்படை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு தினமும் பால், தயிர், பன்னீர், திரவியப் பொடி, இளநீர் என 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற நேற்று மாலை 7 மணி அளவில் சுவாமிக்கு வைரக்கிரீடம் அணிவித்து நவரத்தின கற்கள் பொருந்திய செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை வெகு விமர்சையாக தேரோட்டம் நடைபெற்றது. தேரினை பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். இன்று மாலையில் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு மலைமீது உச்சி பிள்ளையார் கோயிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும். இதற்கான விழா ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
இதையும் படியுங்கள்: கார்த்திகை தீப திருநாளில் வீட்டில் 27 விளக்குகள் வைப்பதன் பலன்கள்
இதற்காக உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் உள்ள தீப மண்டபத்தின் நாலாபுறமும் வெள்ளை அடிக்கப்பட்டு சிவப்பு வர்ணம் பூசப்பட்டு தயார்நிலையில் உள்ளது. மேலும் தீபத்துக்காக மூன்றரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரை, 350 லிட்டர் நெய், 100 மீட்டர் கடா துணியில் தயாரான திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை தயார் நிலையில் உள்ளது.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.