கடலுக்கு நடுவே பிரம்மாண்ட பேனா நினைவு சின்னம் தமிழக அரசு திட்டம்

0
13

கடலுக்கு நடுவே பிரம்மாண்ட பேனா நினைவு சின்னம் தமிழக அரசு திட்டம்.

உலகின் மிக நீளமான கடற்கரைகளில் இரண்டாவது இடம் பெற்று உள்ள சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞரின் நினைவைப் போற்றும் விதமாக கடலுக்கு நடுவே மிக பிரம்மாண்டமாக 80 கோடி ரூபாய் செலவில் 134 அடி உயரத்தில் அவர் பயன்படுத்திய பேனா நினைவு சின்னத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

கடலுக்கு நடுவே அமைக்கப்பட உள்ள நினைவு சின்னத்தை மக்கள் பார்வையிட ஏதுவாக 650 மீட்டருக்கு கண்ணாடி பாலமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாநில கடரோர மண்டல மேலாண்மை வாரியம் இத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் முதல்-அமைச்சரும் மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார்.

கடலுக்கு நடுவே பிரம்மாண்ட பேனா நினைவு சின்னம் தமிழக அரசு திட்டம்

அவருக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவத்தில் பிரமாண்ட தூண் ஒன்றும் அமைக்கப்படுகிறது. கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களும் அந்த நினைவிடத்தில் அமைகிறது.

மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது.

கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

பாலத்தில் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கப்படும். இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் அமையும் வகையில் கட்டப்படும். கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் இரும்பிலான இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்படும்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு படகில் சென்று வருவது போல் மெரினாவில் இருந்து நடுக்கடலுக்கு கடலின் அழகை ரசித்தபடி நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை 133 அடியாகும். அதாவது 40.5 மீட்டர் உயரம் கொண்டது. ஆனால் மெரினா கடலில் அமையும் பேனா நினைவு சின்னம் திருவள்ளுவர் சிலையை விட 1 அடி அதிக உயரம் கொண்டதாக 134 அடியில் அதாவது 42 மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த பிரம்மாண்ட கட்டுமானத்துக்கு ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்’ என்று பெயரிடப்பட உள்ளது. மும்பையில் சத்ரபதி சிவாஜிக்கு அரபிக்கடலில் மகாராஷ்டிரா அரசு நினைவு சின்னம் கட்டி வருகிறது. அதேபோல் மெரினாவில் வங்க கடலில் பேனா நினைவு சின்னம் எழுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் முன்மொழிவு பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடலோர ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதிக்காக விரைவில் இந்த திட்டம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. எழுத்தாற்றல் மிக்கவரான கருணாநிதி பல நூல்களை எழுதியவர்.

அவர் தமிழுக்கு, இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பேனா நினைவு சின்னம் நடுக்கடலில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நினைவு சின்னம் வங்க கடலில் அமையும் போது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here