அரசு பள்ளிகளில் LKG, UKG தொடர்ந்து நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.
தற்போது எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக ஆட்சியில் 2381 அரசு பள்ளிகளில் எல்கேஜி யூகேஜி வகுப்புகள் புதியதாக கொண்டு வரப்பட்டன. இதற்கு பொது மக்களிடமிருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் பெரும் வரவேற்பு இருந்து வந்தது. இத்திட்டதிற்காக தொடக்க கல்வியில் இருந்த ஆசிரியர்கள் பணிமாறுதல் செய்யப்பட்டிருந்தனர்.
ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை காரணமாக வரும் கல்வியாண்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என பள்ளிகல்வித்துறை அண்மையில் அறிவித்தது. இந்த வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள், அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையத்தின் படி இயங்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்தது. இதற்கு பெரும் எதிர்ப்பு பெற்றோரிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: அம்மா மினி கிளினிக்குகளை மூடியது, அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்தது, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தியது, தாய்மார்களுக்கு கொடுக்கப்பட்ட அம்மா பரிசுப் பெட்டகத்தை ரத்து செய்தது, அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தை முடக்கியது என்ற வரிசையில் தற்போது அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை நடப்பு கல்வியாண்டு முதல் மூட அரசு முடிவெடுத்துள்ளதாக பத்திரிகைகளில் வெளி வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம்’ என்ற பழமொழி தான் என் நினைவிற்கு வருகிறது. என, பலவாறு ஆளும் திமுக அரசை சாடியிருந்தார்.
இந்நிலையில், பல தரப்புகளிலிருந்தும் வந்த கோரிக்கையை ஏற்று எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை அரசு பள்ளிகளில் நடத்திட தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்திரவிட்டுள்ளது. மேலும், இத்திட்டத்திற்கான சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.