இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முக தன்மைக் கொண்ட கௌதம் வாசுதேவ் மேனனின் மூத்த மகன் ஆரியாயோஹன் மேனன் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார்.
தமிழ்த் திரையுலகிற்கு மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக களம் கண்டவர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர் காதல் கதைகளை சொல்வதில் தனக்கென தனிப்பாதையில் பயணிப்பவர் இளைஞர்களின் நிலைக்கே சென்று படங்களை இயக்கி தனிமுத்திரைப் பெற்றவர். தற்போது இயக்குநர் பணியிலிருந்து நடிக்கவும் செய்துள்ளார் அவரது பேச்சு மற்றும் நடிப்பு மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
அவர் இயக்கிய படங்களான மின்னலே, காக்க காக்க, விண்ணைத் தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், நீ தானே என் பொன் வசந்தம் என பல திரைப்படங்களின் இயக்கத்தின் மூலம் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார். தற்போது, சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படமும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவர உள்ளது.

இந்நிலையில், அவரது மூத்த மகன் ஆர்யா யோஹன் TNPL கிரிக்கெட்டில் நேற்று நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் இடதுக்கை பந்து வீச்சாளராக முதன் முதலாக களமிறங்கினார். தனது முதல் ஓவரிலேயே சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் பேட்ஸ்மேனை விக்கெட் எடுத்தார். பவர்ப்பளேவில் 2 ஓவர் வீசி 15 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டும் வீழ்த்தினார். மொத்தம் 3 ஓவர்கள் வீசிய அவர் 26 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டும் எடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் டி.என்.பி.எல். நடைபெற்று வருகிறது. நடப்பு டி.என்.பி.எல். தொடர் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் நெல்லை அணியின் வெற்றிக்கு ஆர்யா யோஹன் மேனன் முக்கிய காரணமாக இருந்தார்.