மகிஷாசுர சம்ஹாரம்: வருடந்தோறும் மைசூரில் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதேபோல் இன்றும் தசரா விழா நாடெங்கிலும் காலை முதல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மைசூருக்கு அடுத்தபடியாக குலசை முத்தாலம்மன் கோயிலில் தசரா விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த வருட தசரா விழாவுக்கான கொடியேற்றம் கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி தொடங்கியது. இவ்விழாவுக்காக பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்து காளி, குரங்கு, ராஜா, ராணி போன்று பல வேடமணிந்து ஊர் ஊராக சென்று நடனமாடி, பாட்டுப்பாடி காணிக்கை பெறுவர். அதன்படி கடந்த 10 நாட்களாக சேமித்த காணிக்கைகளை பக்தர்கள் இன்று கோவில் உண்டியலில் செலுத்துவது வழக்கம். அதன்படி விரதமிருந்து, வேடமிட்ட பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடன்களை குலசையில் செலுத்தி வருகின்றனர்.
பத்தாம் நாளான இன்று தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமில்லாமல், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவது வழக்கம். இன்று நள்ளிரவு கோயில் கடற்கரையில் நடைபெறும் மகிஷாசுர சம்ஹாரத்தை காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர். லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.