கேக் சிலை: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே தனியார் பேக்கரி ஒன்றில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முழு உருவத்தை தத்ரூபமாக கேக்கில் செய்து காட்சிப்படுத்தியுள்ளனர். இதனை தயார் செய்த மோகன்ராஜ், சங்கர், எட்வின் பாபு, வரதராஜன் ஆகியோர் கூறுகையில் கடந்த 2 நாட்களாக முயன்று இந்த கேக்கை இரவு பகலாக செய்து முடித்துள்ளோம். இந்த கேக்கின் உயரம் 5.5 அடி ஆகும். இந்த கேக் சிலை செய்யப்பட்டதன் நோக்கம் தமிழக முதல்வர் தொடர்ந்து அயராது உழைத்து பல நல்ல திட்டங்களையும், தமிழக மக்களின் நலனுக்காக பல பணிகளையும் செய்து வருவதற்கு நன்றி கடனாக இந்த கேக் சிலையை செய்துள்ளோம்.
மேலும் இந்த கேக் சிலை 50 கிலோ மைதா மாவு, 90 கிலோ சர்க்கரை, 120 முட்டை உள்ளிட்டவற்றின் கலவையுடன் 90 கிலோ எடையுடன் தயாராகி உள்ளது. ஒரு மாதம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் படி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலையை பாதுகாப்பான கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பார்வையளார்கள் பார்க்கும்படி வைத்துள்ளோம். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேக் சிலையுடன் பொதுமக்கள் நின்று செல்பி எடுத்து செல்கின்றனர். இதனை பார்க்கும் போது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த கேக் தயாரிக்க சுமார் ரூ.2 லட்சம் செலவிடப்பட்டுள்ளது என்றனர்.