தமிழ் படங்கள்: எப்போதும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்கள்தான் வருடந்தோறும் வசூலில் முன்னணியில் இருக்கும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக நிலவிய கொரோனா தொற்றின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் மக்கள் அனைவரும் ஓடிடி பக்கம் சென்று விட்டனர். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் கூட்டம் வர ஆரம்பித்தது. அந்த வகையில் முன்னணி ஹீரோக்கள் அல்லாத சில படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் முன்னணியில் இருக்கின்றன. அப்படி முன்னணியில் இருக்கும் 6 படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
1. லவ் டுடே
ஜெயம் ரவியை வைத்து ‘கோமாளி’ படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த படம் ‘லவ் டுடே’. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் தற்போது 90 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளது. இப்படம் இந்தளவில் வெற்றி பெறும் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் இப்படம் வசூலை வாரிக்குவித்துள்ளது. 2கே கிட்ஸ்களை கவரும் வகையில் கதைக்களம் அமைந்திருந்ததால் இளைஞர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று, தற்போது தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அங்கும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தி ரீமேக்கிற்கான வேலைகளும் நடந்து வருகிறது.
2. சர்தார்
தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றி பெற்றது. தண்ணீர் பாட்டிலினால் ஏற்படும் முறைகேடுகள் குறித்து ஆராயும் உளவாளியாக கார்த்தி இரட்டை வேடம் ஏற்று இப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளது. கார்த்தி நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘விருமன்’ படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
3. திருச்சிற்றம்பலம்
தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ‘மாறன்’ திரைப்படம் பெரிதாக வெற்றி பெறாத நிலையில், அடுத்ததாக வெளியான ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இருப்பினும் தி கிரே மேன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் அவரை உலக அளவில் பிரபலபடுத்தியது. அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
4. டான்
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட வெற்றியை தொடர்ந்து வெளியான திரைப்படம் ‘டான்’. இப்படமானது தந்தை சென்டிமென்ட் மற்றும் கல்லூரியை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது. இதற்கு பின்பு அவர் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.
5. ராக்கெட்ரி-நம்பி விளைவு
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 50 கோடி வசூல் ஈட்டியது. மாதவன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.
6. டாணாக்காரன்
விக்ரம் பிரபு நடிப்பில் ஓடிடியில் வெளியான டாணாக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. ஓடிடியில் வெளியானாலும் பீரியட் கால படமாக காவல்துறை பயிற்சியின் போது நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் விக்ரம் பிரபுவுக்கு மிகப்பெரிய கேரியர் பிரேக் கொடுத்தது. ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்களை கவர்ந்து சர்ப்ரைஸ் ஹிட் அடித்த படங்களின் வரிசையில் இந்த படமும் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.