ஐநா தலைமையகம். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஐநா பொதுசெயலாளர் அன்டோனியா குட்டரெஸ் மற்றும் ஐநா தலைவர் சாபா கொரோசி இணைந்து கடந்த மாதம் திறந்து வைத்தனர். அப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருடன், சாபா கொரோசி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஐநா பாதுகாப்பு கவுன்சிலினில் இந்தியாவின் பதவிக்காலம், ஜி20 தலைமைப் பொறுப்பில் இந்தியாவின் குறிக்கோள்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இதன் தொடர்ச்சியாக ஐநா தலைவர் சாபா கொரோசி இம்மாதம் 29ம் தேதி இந்தியா வர உள்ளதாகவும், மூத்த அதிகாரிகளை சந்தித்து பேச இருப்பதாகவும் ஐநா செய்தி தொடர்பாளர் பெளலினா குபியாக் கூறினார். இந்த பயணத்தின்போது இந்திய விஞ்ஞானிகளை அவர் சந்திக்கிறார். நீர் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களையும் சாபா கொரோசி பார்வையிடுகிறார்.