புதுப்படங்கள்: பொன்னியின் செல்வன் பட வெற்றியை தொடர்ந்து இந்த வாரம் ரிலீசாக இருந்த பல புதுப்படங்கள் ரிலீசாகாமல் தள்ளிப்போயுள்ளன. பொன்னியின் செல்வன் படத்தைக்காண இரசிகர்கள் அதிகளவு ஆர்வம் காட்டி வருவதால் இந்த வாரம் வெளியாக இருந்த புது தமிழ்ப்படங்களின் ரிலீஸ் தள்ளிப்போகியிருக்கிறது. கடந்த செப்டம்பர் 30ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிக்கெட் விற்பனையிலும் உலக அளவில் 200 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியும் இரசிகர்கிளிடையே இன்னும் ஆர்வம் குறையாமல் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதனால் இந்த வாரம் வெளியாகவிருந்த சில தமிழ் படங்கள் தள்ளி்ப் போகிறது.
அக்டோபர் முதல் வாரத்தில் சில தமிழ்ப்படங்கள் வெளியாக இருப்பதாக முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘பார்டர்’ திரைப்படம் அக்டோபர் 5ம் தேதி வெளியாவதாக இருந்தது. சுந்தர்.சி இயக்கத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்துள்ள ‘காபி வித் காதல்’ திரைப்படம், நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி, த்ரிஷா நடித்துள்ள ‘சதுரங்க வேட்டை 2’, ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவா, ப்ரியா ஆனந்த், ஊர்வசி, யோகி பாபு நடித்துள்ள ‘காசேதான் கடவுளடா’, சுந்தர வடிவேலு இயக்கியுள்ள ‘ரீ’ ஆகிய படங்கள் அக்டோபர் 7ம் தேதி வெளியாக இருந்தன. ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ள நிலையில் இப்படங்களின் ரிலீஸ் தள்ளிப் போகிறது.
பொன்னியின் செல்வன் படத்திற்கு அதிக காட்சிகள் கொடுக்கப்பட்டு தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் புதுப்படங்களுக்கு அதிக அளவில் ஸ்கிரீன் கிடைக்குமா, வரவேற்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளதால் ரிலீ்ஸ் தள்ளிப்போவதாக சொல்லப்படுகிறது. அடுத்த வாரமும் ரிலீஸ் ஆவது சந்தேகம்தான். ஏனெனில் அதற்கடுத்த வாரம் தீபாவளி என்பதால் தீபாவளிக்கு ரிலீஸாகும் புதுப்படங்களின் காரணமாக ஒரே வாரம் மட்டும் இப்படங்களை திரையிட்டு எடுத்து விட்டால் நஷ்டம் உண்டாகும் என்ற குழப்பமும் நிலவுவதால் இப்படங்களின் ரிலீஸ் தேதி அடுத்து நவம்பர் மாதமாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை அடுத்த வாரமும் எந்த படமும் வெளியாகவில்லை என்றால் தீபாவளியன்று ரிலீஸாக இருக்கும் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’, கார்த்தியின் ‘சர்தார்’ ஆகிய படங்கள் தான் தமிழிலிருந்து பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு புது ரிலீஸாக வரும்.