பிச்சைக்காரன்: சசி இயகக்த்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படம் கடந்த 2016ல் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் தெலுங்குப் பதிப்புக்கும் அதிக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இந்த படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இதை விஜய் ஆண்டனியே இயக்கி, நடித்தும் வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் மலேசியாவில் நடந்தபோது திடீரென்று ஏற்பட்ட விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனிக்கு தாடை மற்றும் மூக்குப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மலேசியாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பிறகு சென்னையிலுள்ள மருத்துவமனைக்கு வந்து தீவிர சிகிச்சை பெற்றார்.
தற்போது உடல்நிலை தேறிவரும் விஜய் ஆண்டனி அவர் தான் 90 சதவிகிதம் குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘அன்பு இதயங்களே நான் 90% குணமடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்றுசேர்ந்து விட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணர்கிறேன். வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் ‘பிச்சைக்காரன் 2′ படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளேன். அனைவருடைய அன்புக்கும் எனது நன்றி’ என்று கூறியுள்ளார்.