வாத்தி: ‘நானே வருவேன்’ படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்து முடித்துள்ள படம் ‘வாத்தி’. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழ்நாட்டில் இப்படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும், லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது.
கல்வியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வருகிற பிப்ரவரி 17ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷீக்கு அப்பாவாக நடித்த சமுத்திரக்கனி, இப்படத்தில் எதிர்மறையான கேரக்டரில் நடித்துள்ளார்.
கல்வியை சேவையாக பார்க்காமல் அதை வைத்து பணம் சம்பாதிக்கும் கும்பலை எதிர்க்கும் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். அவருக்கு இணையாக ஆசிரியை கேரக்டரில் சம்யுக்தா நடித்துள்ளார். டிரெய்லரை பார்க்கும் போது கமர்ஷியல் தன்மை அதிகமாக இருப்பது போல் தெரிகிறது. தற்போது ‘வாத்தி’ டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.