நடிகர் ஷாம்: வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழில் ‘வாரிசு’, தெலுங்கில் ‘வாரிசுடு’ என்ற பெயர்களில் உருவாகியுள்ள படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, யோகி பாபு, ஜெயசுதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலன்று ஜனவரி 11ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்துள்ள நடிகர் ஷாம் விஜய் பற்றி கூறியதாவது.
‘எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா, மும்தாஜ் நடித்த ‘குஷி’ படத்தில் நானும் நடித்திருந்தேன். அதற்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளேன். தனி ஹீரோவாக பல படங்களில் நடித்திருக்கும் நான், சில படங்களில் மற்ற ஹீரோக்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறேன். இன்று அவர்கள் பான் இந்தியா நடிகர்களாக மாறியுள்ளனர். விஜய் எனக்கு அண்ணன் மாதிரி. திரை வாழ்க்கையிலும், நிஜ வாழ்க்கையிலும் அவரது பணிவையும், என்னிடம் காட்டிய அன்பையும் வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை.
ஜெயம் ரவியுடன் ‘தில்லாலங்கடி’ படத்தில் நான் நடித்திருந்தது பற்றி விஜய் பாராட்டி இருந்தார். தெலுங்கில் ரவிதேஜாவுடன் ‘கிக்’ படத்தில் நான் நடித்திருந்ததைப் பற்றியும் பாராட்டி இருக்கிறார். ஒருமுறை அவரது வீட்டுக்கு என்னை வரவழைத்து விருந்து கொடுத்தார். அவரே எனக்கு உணவு பரிமாறினார். அவரது விருந்தோம்பல் பாராட்டத்தக்கது. ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது நாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தில் இணைந்து வாழ்ந்தது போல் இருந்தது. தொடர்ந்து அவருடன் சென்னையிலும், ஐதராபாத்திலும் நடந்த படப்பிடிப்பில் 63 நாட்கள் பங்கேற்றேன்’ என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.