வாரிசு: தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி விஜய் நடித்துள்ள வாரிசு படத்தை தமிழில் ‘வாரிசு’ என்றும், தெலுங்கில் ‘வாரிசுடு’ என்றும் இயக்கியுள்ளார். அவர் இயக்கிய வாரிசு படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
வம்சி பைடிபள்ளி தெலுங்கில் குடும்ப பின்னணி கொண்ட கதைகளை இயக்குவதில் புகழ் பெற்றவர். அதுபோல் ‘வாரிசு’ படமும் குடும்பம் சார்ந்த படமாக அமைந்துள்ளதால் தியேட்டர்களில் மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இதையடுத்து வந்த பட நிகழ்ச்சியில் வம்சி பைடிபள்ளி உருக்கமாகப் பேசியதாவது.
‘வாரிசு’ ஒரு படம் அல்ல. விஜய், தில் ராஜூ ஆகியோர் என்மீது வைத்த நம்பிக்கை. இப்படம் தொடங்கிய நாளிலிருந்து ‘இது தெலுங்கு இயக்குனர் படம்’ என்றே சொல்லி வந்தனர். இது என் மனதை மிகவும் பாதித்தது. வாரிசு பக்கா தமிழ்ப் படம்.
நான் தமிழ் இயக்குனரா? தெலுங்கு இயக்குனரா? என்பதை தாண்டி முதலில் ஒரு மனிதன் என்று மதியுங்கள். இதுபோன்ற பிரிவினையை ஒதுக்கிவிட்டு ‘வாரிசு’ படத்துக்காக விஜய் ரசிகர்கள் அவர்களின் இதயத்தில் எனக்கு ஒரு இடம் கொடுத்துள்ளனர். இப்படத்தில் சரத்குமாரின் கேரக்டர் மற்றும் நடிப்பைப் பார்த்த என் தந்தை உடனே என்னை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு’ என்று அவர் உருக்கமாக பேசினார்.