தேவரகொண்டா: தெலுங்கில் அறிமுகமான விஜய் தேவரகொண்டா தமிழில் ‘கீதா கோவிந்தம்’ படம் மூலம் பிரபலமானார். தனது தோற்றத்தின் மூலமும், யதார்த்தமான நடிப்பின் மூலமும் ரசிகர்களை கவர்ந்த விஜய் தேவரகொண்டா கடந்த 5 வருடமாக டிசம்பர் மாதத்தில் தனது ரசிகர்களில் சிலரை தேர்வு செய்து தன்னுடன் ஒரு நாள் கழிப்பது, தனது படப்பிடிப்பில் ஒரு நாளை கழிக்க வைப்பது, ரசிகர்களின் வீட்டுக்கு சென்று அவர்களை சந்திப்பது உள்ளிட்ட விஷயங்களை அவர் செய்து வருகிறார்.
இந்நிலையில் இந்த முறை தனது ரசிகர்களில் 100 பேரை தேர்வு செய்துள்ளார். அவர்களை ஒரு வாரத்துக்கு சுற்றுலா அனுப்புகிறார். இதற்கான மொத்த செலவையும் விஜய் தேவரகொண்டா ஏற்றுக்கொள்கிறார். இந்தியாவிலுள்ள மலைப் பிரதேசங்கள், கடற்கரை இடங்கள், கலாச்சார இடங்கள், ஆன்மீக ஸ்தலங்கள், பாலைவன பகுதி என எந்த இடத்துக்கு செல்ல விருப்பம் என்பதை ரசிகர்களிடமே கேட்டிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. 100 பேரில் மெஜாரிட்டி ரசிகர்கள் எந்த இடத்தை தேர்வு செய்கிறார்களோ அந்த இடத்துக்கு அவர்களை அனுப்ப இருக்கிறார்.
இது பற்றி அவர் கூறுகையில், ‘ஆண்டுதோறும் ஒரு மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் ரசிகர்களுக்காக ஒதுக்குகிறேன். அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதே என் நாேக்கம். எந்த எதிர்பார்ப்பும் இன்றி என் மீது அன்பு செலுத்துபவர்கள் அவர்கள்தான். அவர்களுக்காக நான் செய்யும் சிறு காரியம் இது. படப்பிடிப்பு இருப்பதால் இந்த முறை அவர்களுடன் நான் சுற்றுலா செல்ல முடியாது. ஆனால் அவர்கள் அனைவரும் இந்த டூரை என்ஜாய் செய்வார்கள் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.