விஜய் சேதுபதி: ஆரம்ப கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. பின்னர் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான ‘பீட்சா’, ‘நடுவுல கொஞசம் பக்கத்த காணோம்’ போன்ற திரைப்படங்கள் அவருக்கு சினிமாவில் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்தார். அவரது யதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். முன்னணி ஹீரோக்களில் ஒருவரானார். இருப்பினும் அவர் தனது இயல்பான குணத்தால் அனைவரிடமும் யதார்த்தமாக பழகுவது அவரை எல்லோருக்கும் மேலும் பிடிக்க செய்தது. அவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் முன்னணி கதாநாயகர்களுக்கு வில்லனாக நடித்தும் புகழ் பெற்றார். அந்த வகையில் அவர் நடித்த ‘விக்ரம் வேதா’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய படங்கள் அவருக்கு வில்லனாகவும் நல்ல பெயரை வாங்கி கொடுத்தன.
தற்போது அவர் போலீஸ் அதிகாரியாக நடித்த ‘டிஎஸ்பி’ படம் வெளியானது. சமீபகாலமாக படங்களில் விஜய் சேதுபதி கூடுதல் உடல் எடையுடன் காணப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் டயட் மூலம் தனது உடல் எடையை 7 கிலோ வரை அவர் குறைத்துள்ளார். தனது புதிய ஸ்லிம் தோற்றத்தை சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். விஜய் சேதுபதியிடம் இருக்கும் அர்ப்பணிப்பு குணம் எங்களை வியக்க வைக்கிறது என்று அவரை பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளத்தில் இதுவரை 10 லட்சம் லைக்குகளை இந்த புகைப்படம் பெற்று வைரலாகி வருகிறது.