கன்னட நடிகர் யாஷ்: கேஜிஎஃப் 1, கேஜிஎஃப் 2 படங்களின் மூலம் பான் இந்தியா நடிகராகிவிட்டார் கன்னட நடிகர் யாஷ். அவருக்கு பாலிவுட்டிலும் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இதனால், பாலிவுட் இயக்குனர்கள் யாஷை மனதில் வைத்து நிறைய கதைகளை எழுதி வருகின்றனர். ஆனால் கேஜிஎஃப் 2 படத்திற்கு பிறகு எந்த படத்தில் நடிப்பது என்று முடிவு செய்யாமல் இருக்கிறார் யாஷ். இதற்கு காரணம் அவர்மேல் இரசிகர்களுக்கு பலமடங்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதுதான். அதனை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் யாஷ் இருக்கிறார். பாகுபலி 2வுக்கு பிறகு பிரபாசிடமும் இதுபோன்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் அவர் சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடித்து தனது மவுசை குறைத்துக் கொண்டார். அது மாதிரி தனக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் யாஷ் தெளிவாக இருக்கிறார். இதுவரைக்கும் அவர் 50க்கும் மேற்பட்ட கதைகளை கேட்டு நிராகிரித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தியில் பல படங்களை இயக்கிய ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா ‘கர்ணா’ என்ற படத்தை இயக்குகிறார். மகாபாரதத்தில் வரும் கர்ணனை பற்றிய படம் அது. மகாபாரதத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து அவர் படமாக்க உள்ளார். இதில் நடிக்க யாஷிடம் அவர் பேசி இருக்கிறார். அதுபோல ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. இதில் தேவா என்ற கேரக்டர் இடம் பெறுகிறது. அதில் நடிக்கி யாஷை படக்குழுவினர் அணுகியுள்ளனர். ஆனால் இரண்டு படங்களுக்கும் எந்த பதிலையும் சொல்லாமல் மிகத்தீவிரமான யோசனையில் இருக்கிறாராம் யாஷ். ஜனவரியில் யாஷின் பிறந்தநாள் வருகிறது. அப்போது அவர் தன்னுடைய அடுத்த படத்தை பற்றி அறிவிப்பார் என இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.