அயோத்தியப்பட்டணம்: சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியில் 146 அடி உயரத்தில் உலகிலேயே மிக உயரமான முத்துமலை முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலம், மாவட்டங்களிலிருந்து முருகனை தரிசிக்க பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயில் சேலம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் வெள்ளாளகுண்டம் பகுதியில் 45 அடி உயரத்தில் நந்தீஸ்வரர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சிலையின் சிறப்பம்சமாக நந்தி வயிற்றுக்குள் சென்று தரிசிக்கும் அமைப்பில் மலையில் இருந்து தோன்றும் வடிவில் 9 அடி சிவபெருமான் சிலை, 18 சித்தர்கள், பைரவர் மற்றும் சிவலிங்கம் அமைக்கப்பட உள்ளது. வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சிவனடியார் ராஜவேல் என்பவர் உலகிலேயே மிக உயரமான நந்தி சிலையை அமைக்க முடிவு செய்தார். இந்த சிலையை மலேசியா பத்துமலை முருகன் மற்றும் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் தியாகராஜனை கொண்டு வடிவமைக்க திட்டமிட்டார்.
அதன்படி கடந்த 2 ஆண்டுகளக்கு முன்பு நந்தீஸ்வரன் சிலை அமைக்கும் பணியை தொடங்கினார். தற்போது 45 அடி உயரத்தில் மிக நேர்த்தியாக உலகிலேயே மிக உயரமான நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நந்தீஸ்வரர் உடலுக்குள் சென்று சிவபெருமானை தரிசிக்கும் வடிவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சிலையை காணவும், வழிபடவும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிவபக்தர்கள் வந்து செல்கின்றனர்.