பொம்மை நாயகி: யோகி பாபு சிறு சிறு வேடங்களில் படங்களில் நடித்து அறிமுகமாகி தற்போது தமிழின் முன்னணி ஹீரோக்கள் அனைவரின் படங்ளிலும் நகைச்சுவை நாயகனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கி வருகிறார். ஒவ்வொரு படத்திலும் இவரது யதார்த்தமான காமெடி சென்ஸை மக்கள் வெகுவாக ரசிக்கின்றனர். இந்நிலையில் யோகி பாபு காமெடியை விட்டுவிட்டு மிகவும் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம்தான் ‘பொம்மை நாயகி’. இப்படத்தில் யோகி பாபு பொறுப்பான தந்தை வேடம் ஏற்றுள்ளார். எளிய குடும்பத்திற்குள் ஏற்படும் பிரச்சினைகளை ஒரு தந்தை எப்படி போராடி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் கதை.
இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இதில் யோகி பாபுவிற்கு மகளாக சிறுமி ஸ்ரீமதி நடித்துள்ளார். இப்படத்தை ஷான் எழுதி இயக்கியுள்ளார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். ‘தெருக்குரல்’ அறிவு பாடல்களை எழுதியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதில் யோகி பாபு, சிறுமி ஸ்ரீமதியுடன் கடற்கரை ஓரம் நின்று கைகாட்டும்படி காட்டப்பட்டுள்ளது. இப்படம் வரும் பிப்ரவரி 3ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.