கேரளா: 1980களில் தென்னிந்திய சினிமாவில் ஜொலித்த முன்னணி கதாநாயகிகள் ஒன்று சேர்ந்து ஆண்டு தோறும் ரீயூனியன் பார்ட்டி வைக்கின்றனர். இதில் 80களில் நடித்த ஹீரோக்களும் கலந்து கொள்கிறார்கள். கடந்த 8 வருடமாக இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. சமீபத்தில் மும்பையில் இந்த பார்ட்டி வைக்கப்பட்டது. இதில் பாலிவுட் நடிகர், நடிகைகள் சிலரும் கலந்து கொண்டார்கள். அவர்களும் 80களில் நடித்தவர்கள்தான். இந்நிலையில் மாஜி ஹீரோயின்களுக்கு போட்டியாக இளம் ஹீரோயின்களும் இனி ஆண்டுதோறும் சந்திக்க முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் இரவு கொச்சியில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், பார்வதி, கல்யாணி பிரிய தர்ஷன், பிரக்யா மார்ட்டின், அதிதி பாலன் உட்பட பலர் பங்கேற்றனர். அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்களாக இருந்தனர்.
இது பற்றி பார்ட்டியில் பங்கேற்ற ஒரு நபர் கூறுகையில், ‘குறுகிய நேரத்தில் இந்த பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் சினிமாவை சேர்ந்த நடிகைகள் வர முடியவில்லை. அடுத்த ஆண்டு முதல் அவர்களும் இதில் பங்கேற்பார்கள். இந்த பார்ட்டி மாஜி ஹீரோயின்களுக்கு போட்டியாக நடக்கவில்லை. அந்த பார்ட்டியை ஏற்பாடு செய்த நடிகை லிசி இந்த பார்ட்டியிலும் பங்கேற்றார். அதனால் இதை போட்டி பார்ட்டியாக நினைக்க வேண்டாம்’ என்றார்.