‘ஜோக்கர்’ பட ஹீரோ குருசோமசுந்தரம் ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்’ விருது பெறுகிறார்

0
4

குருசோமசுந்தரம்: சிறந்த முன்னணி நடிகருக்கான ஆசியக் கண்டத்தின் ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்’ விருது ஜோக்கர் பட ஹீரோ குருசோமசுந்தரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிய திரைப்படங்களுக்கான ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட் 2022’ தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பதினாறு நாடுகளை சேர்ந்த பல்வேறு மொழி படங்கள் கலந்து கொண்டு போட்டியிட்டன. சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை, சிறந்த படம் மற்றும் சிறந்த தொழில் நுட்பகலைஞர்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து சிறந்த நடிகருக்கான விருது நடிகர் குருசோமசுந்தரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது மலையாளத்தில் அவர் நடித்து வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற ‘மின்னல் முரளி’ திரைப்படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற இவர் கடந்த 2011 ம் ஆண்டு வெளியான ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கடல், பாண்டிய நாடு, ஜிகர்தண்டா, தூங்காவனம், கோஹினூர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

joker movie hero gurusomasundaram

இருப்பினும் கடந்த 2016ம் ஆண்டு குருசோமசுந்தரம், ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படம் தான் இவரது திறமையை மக்கள் மத்தியில் எடுத்துகாட்டும் படமாக அமைந்தது. இப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் வித்தியாசமாக இருந்ததால் அனைவரின் ஈர்ப்பையும் பெற்றார். ‘5 சுந்தரிகள்’, ‘கோஹினூர்’ உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர், ‘மின்னல் முரளி’ திரைப்படத்தில் இவர் நடித்த நெகடிவ் கதாபாத்திரத்தின் மூலம் மலையாளம் தாண்டி மற்ற மொழி ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார். இப்படத்தில் இவரின் சிறப்பான நடிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற இருக்கிறது. இதில் ஆசிய கண்டத்தின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த  பல்வேறு மொழி படங்களும், பல்வேறு மொழி கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here